செவ்வாய், 6 செப்டம்பர், 2011

அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6


அடித்தளம், மேல்கட்டுமானத்திற் கிடையிலான‌ உள்ள உறவு

இனி, பொருளாதார அடித்தளம், மேல்கட்டுமானம் ஆகியவற்றின் பண்புகளையும் இவற்றிற்கிடையே உள்ள உறவுகளைப் பற்றி பார்ப்போம். அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உற்பத்தி உறவு ஒரு வகையான நிலைத்த தன்மை பெற்றிருக்கக் காணலாம். அதே சமயம் உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெறுகின்றது. அது ஒரு கட்டத்தில் உற்பத்தி உறவோடு முரண்பட்டு உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.


அடித்தளம் பொருளாதார‌ வகைப்பட்டது; ஆகவே வரையறுக்கப்பட்டது; ஆனால் மேற்கோப்பு என்பது சிந்தனை வகைப்பட்டது; அது வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆகவே இரண்டுக்குமான உறவு என்பது ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் பார்க்கப்படமுடியாது. நேரடியாகவும் பார்க்கப்பட முடியாது. அந்த உறவு சிக்கலானதும், இயங்கியல் வகைப்பட்டதும் ஆகும்.

மேற்கோப்புகூறுகள் சிந்தனை சம்பந்தப்பட்டவையாகும்; சித்தாந்த ரீதியானவை. நுட்பமானவை; மேற்கோப்பின் அமைப்புக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் பாதித்துக்கொண்டும் இருப்பவை; அது மட்டுமின்றி அவை அடித்தளத்தையும் பாதிக்கவல்லவை; வர்க்கப் போராட்டத்தை துரிதபடுத்தும் வல்லமை உடையவை; உற்பத்தி உறவை மாற்ற வல்லவை; ஆனால் இவற்றிற்கிடையே எத்தகைய பாதிப்புகளும் விளைவுகளும் நிகழ்ந்தாலும் இறுதியாக நிர்ணயம் செய்வது அடித்தளம் மட்டுமே என எங்கல்ஸ் கூறுகின்றார்.

உற்பத்தி உறவைப் பொருத்தவரை, அது தற்காலிகமாக நிலைத்த தன்மை கொண்டிருக்கின்றது. அது தொடர்ச்சியாக எப்போதும் வளர்ச்சி பெற்று வரும் உற்பத்தி சக்திகளால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு உற்பத்தி உறவின் நிலைத்த தன்மைக்கும், உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியாக மாறும் தன்மைக்கும் உள்ள முரண்பாடுதான் உற்பத்திமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

அடிக்கட்டுமானத்தின் இயங்குதளம் சமூகப் பொருளாதாரக் கட்டுமானம் ஆகும். உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டின் செயல்பாடும் இயக்கமும் வரம்பிற்குட்பட்டதாகவும், எல்லைக்கு உட்பட்டதாகவும் இருக்கக் காணலாம். ஆனால் மேற்கட்டுமானத்தின் இயங்குதளம் சிந்தனையாகும். அது இடையறாத தொடர்ச்சியான எல்லையற்ற செயல்பாட்டை நடவடிக்கையைப் பெற்றிருக்கின்றது. மேற்கட்டுமானம் பரந்த விரிந்த அளவில் செயல்புரிகின்றது. சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் இன்றியமையா பங்கை வகிக்கின்றது. மனிதன் உணர்வுபூர்வமாக சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் பங்கெடுப்பதன் மூலம் சிந்தனையின் பாத்திரம் ஒப்பீட்டுரீதியிலான‌ தீர்மானகரமான பங்கை ஆகின்றது.

பொருளாதார அடித்தளம் வெறும் சடப்பொருட்க‌ளின் தொகுப்பன்று. மேல்கட்டுமானத்தின் மீது தொடர்ச்சியாக வினையாற்றி வந்ததன் விளைவுதான் அடிக்கட்டுமானம். அதேபோல மேற்கட்டுமானம் என்பது வெறும் கருத்துக்களின் தொகுப்பு என்று கூறிவிடமுடியாது. அடிக்கட்டுமானத்தின் மீது செல்வாக்கு செலுத்தி இடைவிடாது வினையாற்றியதன் விளைவுதான் மேற்கட்டுமானம்.

சமூகத்தின் அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானம் எழுகின்றது என்பது மிகப்பொதுவான கோட்பாடாகும். இதைக் குறிப்பான சூழ்நிலைமைகளுக்கு பொருத்தும்போது அதன் பொருளை நெகிழ்வாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் தோன்றிய நவீனத்துவ கருத்துக்கள் அடித்தளத்திலிருந்து தோன்றியனவா? சட்ட மற்றும் அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவை இந்திய பொருளாதார அடித்தளத்தின் எழுந்த மேல்கட்டுமானம் என்று சொல்லமுடியுமா? சாதிய சமூகத்தில் சாதியக் கருத்தியல்கள் மேலோங்கியிருந்தன. அதுமட்டுமல்ல அவை அடித்தளத்தைக் கட்டுப்படுத்தவும் பாதிக்க வைக்கவும், செல்வாக்குச் செலுத்தவும் செய்தன. அவை இன்னமும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட நேர்வுகளில் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்றது.

குறிப்பான சூழ்நிலைமையில், அடித்தளத்தில் ஏற்படுகின்ற எல்லா மாற்றங்களும் மேற்கோப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றோ அல்லது மேல்கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் அடித்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றோ புரிந்துகொள்ள கூடாது. அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர்தான் மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கமுடியாது. அடித்தளத்தின் வழியில் மட்டுமே மேல்கோப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்றும் கூறமுடியாது. அல்லாத வழிகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுதான் இயங்கியல் அணுகுமுறையாகும்.

மேல்கட்டுமானத்தில் நடைபெறும் உணர்வு பூர்வமான சிந்தனைப் பணி, அடித்தளத்தை மட்டும் பாதிக்கச் செய்வதில்லை. இதர மேல்கட்டுமான கூறுகளையும் பாதிக்க செய்ய‌வும், செல்வாக்கு செலுத்தவும் செய்கின்றது.. உணர்வு பூர்வமான அரசியல் பணி, சமூக உணர்வைப் பாதிக்கச்செய்யும்; தொடர்ந்து அது சமுகப் பொருளார அடிப்படைகளைப் பாதிக்கச்செய்யும். இதன் வழி சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் செய்கின்றது. வரலாற்று பொருள்முதல்வாதம் என்பது சமூகத்தை விளக்குவதற்கான தத்துவம் மட்டுமின்றி சமூகத்தை மாற்றுவதற்கான தத்துவமும் ஆகும். சமூகத்தை ஆய்வு செய்வதற்கான அணுகுமுறையில் மேல்கட்டுமானக் கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகவே சமூகத்தை மாற்றுவதற்கான அணுகுமுறையில் மேல்கட்டுமானம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அடித்தளம் என்பது சாரத்தைக் குறிக்கின்றது. மேல்கட்டுமானம் என்பது வடிவத்தைக் குறிக்கின்றது. அடித்தளத்தில் உற்பத்தி உறவுக்கும், உற்பத்தி சக்திக்கும் உள்ள முரண். இந்த இரண்டுமே சாரத்தின் பகுதிகள் ஆகும். மேல்கட்டுமான கூறுகளுக்குள் உள்ள முரண் வடிவத்தின் பகுதிகள் ஆகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, தவிர்க்க இயலாமல் ஏற்கனவே நிலவி வரும் உற்பத்தி உறவுகளோடு முரண்பட வைக்கின்றது. அதே சமயம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது மேல்கட்டுமானத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேல்கட்டுமானத்தில் உருவாகும் புதிய கூறுகள், அடித்தளத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அடித்தளத்தில் வளர்ந்துவரும் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான‌ முரணை கூர்மைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் செய்யும். அதாவது அடித்தளத்தின் அக முரண்பாட்டை கணக்குதீர்க்க, மேல்கட்டுமானம் அனைத்து அம்சங்களையும் உணர்வுபூர்வமாக பயன்படுத்திக்கொள்கிறது.

மார்க்சு அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என்று வரையறுப்பார். அதே சமயம் அடித்தளம் மேற்கட்டுமானம் இரண்டிற்கும் இடையே உள்ள இயங்கியல் உறவுகளைப் பற்றியும் குறிப்பிடுவார். அதாவது சமூகத்தின் பொருள்முதல்வாத அடிப்படையையும் இயங்கியல் உறவுகளையும் ஒரு சேர விவரிப்பார். மார்க்சின் வரலாற்று பொருள் முதல்வாதக் கருத்துகோப்புக்கள் முழுவதையும் ஒருங்கிணைத்து புரிந்துகொண்டால் அவர் கூறும் 'பொருளாதார நிர்ணயம்' என்பது இயங்கியல் தன்மை உடையது என்பது விளங்கும். பின்னர் எங்கல்ஸ் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த சமூக எதிர்வுக்குள்ள உறவு குறித்து தனது கருத்துரையை வழங்குவார். 'இறுதியாக தீர்மானிக்கும்' என்று பொருளாதார அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்குவார்.

'இறுதி நிர்ணயம்' என்ற எங்கல்சின் கோட்பாடு பொருளாதார‌ அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. அதே சமயம், அடித்தளத்தின் மீது செலுத்தும் மேல்கட்டுமான நிர்ணயத்தினை எங்கல்சு புறந்தள்ளவில்லை. அடித்தளம் மேற்கட்டுமானம் குறித்த மாவோவின் இயங்கியல் ரீதியிலான‌ விளக்கம், எங்கெல்சின் இறுதி நிர்ணயம் என்ற கருத்தாக்கத்தின் வளர்ச்சியாகும். இதன்மூலம் நிர்ணயவாதத்தின் எந்திரதனமான அணுகுமுறை முற்றிலும் நீக்கப்பட்டு அதன் இயங்கியல் அணுகுமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறினால், சித்தாந்த துறையின் தனித்த சுயேச்சையை ஏற்று கொள்ளாதவர் பொருள்முதல்வாதியாக இருக்கலாம். ஆனால் சிந்தாந்த துறைக்கு ஒப்பீட்டு ரீதியிலான சுதந்திரத்தை மறுப்பவர் இயங்கியல்வாதியாக இருக்கமுடியாது. நாம் சித்தாந்த துறையின் தனித்த சுயேச்சையை எப்போதுமே ஏற்கப்போவதில்லை.ஆனால் அதன் ஒப்பீட்டு ரீதியிலான சுதந்திரத்தை ஒருபோதும் மறுக்கப்போவதில்லை. அதே போல பொருளாதார அடித்தளம் வரலாற்றை நிர்ணயிக்கும் என்று சொல்லும் அதே நேரத்தில் பொருளாதார அடித்தளம் ஒன்றுதான் வரலாற்றை நிர்ணயக் கூறாக இருக்கும் என்று கூறவில்லை.

இயங்கியலின் அவசியம்

மார்க்சும் எங்கல்சும், அடித்தளம் மேற்கட்டுமானம் குறித்த கோட்பாட்டை வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் நிறுவி அவ்விரண்டிற்குமான இயங்கியல் ரீதியிலான உறவையும் விளக்கினர். அவருக்கு பின்னர் எங்கல்சும நூல்களின் மூலமாக‌வும் கடிதங்களின் வாயிலாகவும் அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான உறவை இயங்கியல் ரீதியில் வளர்த்தெடுத்துள்ளனர். அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த எங்கல்சின் எழுத்துக்கள் மார்க்சின் கருத்துரைக்கான விளக்கங்கள் மட்டுமல்ல. மார்க்சின் கருத்துரையை இயங்கியல் ரீதியில் வளர்த்தெடுத்த பணியையும் எங்கல்சு செய்துள்ளார்‌.

பொருள்முதல்வாத இயக்கவியலின் முக்கியத்துவத்தை மார்க்சும் எங்கல்சும், லெனினும், மாவோவும் வலியுறுத்த தவறியதே இல்லை. பொருள்முதல்வாதத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்தார்களோ அந்தளவுக்கு இயங்கியலுக்கும் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து பொருள்முதல்வாத சிந்தனையை நிலைநாட்டினார்கள். அதே சமயம் இயக்கமறுப்பியல் அணுகுமுறையை எதிர்த்து இயங்கியலை வலியுறுத்தினார்கள்.

“உணர்வு பூர்வமான‌ இயக்கவியலைக் காப்பாற்றி, அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்திலே நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் அநேகமாக மார்க்சும் நானும் மட்டும்தான்' "இயக்கவியலுக்கு நிரூபணம் இயற்கைதான். அந்தச் சோதனைக்கு மிகவும் வளம் பொருந்திய விசயாதாரங்களைத் தினசரி பெருகிக் கொண்டே போகும் விசயாதாரங்களை நவீன கால இயற்கை விஞ்ஞானம் தந்து கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்." "இப்படி விசயாதாரங்களைத் தந்து முடிவில் இயற்கையின் இயக்கப் போக்கு இயக்கவியல் வகைப்பட்டதே தவிர இயக்க மறுப்பியல் வகைப்பட்டதல்ல என்ற் நவீன கால இயற்கை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்" என 'கார்ல் மார்க்ஸ்' என்னும் நூலிலிருந்து லெனின் கூறுகிறார்.

மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதுதான் பொருள்முதல்வாதத்திற்கான‌ அடிப்படை. இங்கு அடித்தளம் முதன்மையாகவும் மேற்கட்டுமானம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கிறது. இதில் பொருள்முதல்வாதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இயங்கியல் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டுக்குமான உறவு எப்படி பட்டது என்பதைக் காணவேண்டும். இயங்கியல் என்பது இரண்டு எதிர்வுகளின் முரண்பாடும் ஆகும். இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும். அவ்வாறில்லாமல் ஒரு எதிர்வானது மற்றொரு எதிர்வை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது இயங்கியலுக்கு எதிரானதாகும். ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை சார்ந்து இயங்குகிறது என்றால், ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை பலப்படுத்துகிறது என்றால், ஒரு எதிர்வின் போக்கை மற்றொரு எதிர்வு தீர்மானிக்கிறது என்றால், அவை இயங்கியல் ஆகாது. அது வெறும் எந்திரத்தனமான முரணாக மட்டுமே இருக்க வியலும்.

சில முரண்பாடுகளை எடுத்துக் கொண்டு விளக்கலாம். கணிதத்தில் கூட்டல் எதிர் கழித்தல், பெருக்கல் எதிர் வகுத்தல் போன்றவற்றில் ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வுக்கு கட்டுப்பட்டு இருப்பதில்லை. அறிவியலில் நேர் மின்சாரம் எதிர் எதிர் மின்சாரம் போன்றவற்றில் ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை தீர்மானிப்பதில்லை. சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள். சான்றாக, முதலாளி வர்க்கம் எதிர் தொழிலாளி வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் எதிர் ஆளும் வர்க்கம், நிலபிரபுத்துவ வர்க்கம் எதிர் பண்ணையடிமைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இந்த முரண்பாடுகளில் ஒரு எதிர்வு இன்னொரு எதிர்வை சார்ந்துதான் இயங்கும் என்று கூறமுடியுமா? இதைப் போலத்தான் அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற இயங்கியல் முரணை அணுகவேண்டும்.

ஒரு முரண்பாட்டில் ஒரு எதிர்வு எந்த‌வித‌மான தன்மை பெற்றிருக்கிற‌தோ அதே போல‌ ம‌ற்றொரு எதிர்வும் அதே விதமான‌ த‌ன்மை பெற்றிருக்கிற‌து. ஒரு சமயத்தில் ஒரு எதிர்வானது முத‌ன்மை தன்மை பெற்றிருந்தால் இன்னொரு சமயத்தில் இன்னொரு எதிர்வு முதன்மை தன்மை பெற்றிருக்கும். ஒன்று ம‌ற்றொன்றுக்கு க‌ட்டுப்ப‌ட்ட‌தாக‌ இருந்தால் இய‌க்கம் அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லாது.

சர்வ வியாபகப் பரஸ்பரச் செயல்

எங்கும் நிறைந்திருக்கும் முரண்களின் அனைத்தையும் தழுவிய பரஸ்பரச் செய‌ல்பாடுகள்தான் இயக்கவியலுக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துநிலையிலிருந்து இயக்கத்திலுள்ள பருப்பொருள் முழுவதையும் ஆலோசித்துப் பார்த்தோமெனில் நம்மை எதிரிடுகின்ற முதல் விசயம் பரஸ்பரச் செயல் என்பதே யாகும்... "இந்தச் சர்வ வியாபகப் பரஸ்பரச் செயலிலிருந்தே நாம் உண்மையான காரண காரிய உறவு நிலையை வந்து அடைகின்றோம். தனிப்பட்ட நிகழ்வுகளைப் புரிய வேண்டுமெனில் அவைகளின் பொதுவான பரஸ்பரத் தொடர்பிலிருந்து அவற்றைப் பிய்த்தெடுத்து தனிமைப்படுத்தி ஆராய வேண்டும். அப்பொழுது மாறுகிற இயக்கங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் வெளிப்படுகின்றன" என் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற நூலில் எங்கல்ஸ் கூறுவார்.

இயக்கமறுப்பியலுக்கும் இயங்கியலுக்குமான‌ அடிப்படை

இயக்கவியலை தளரவிட்டவரைப் பற்றி எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம் எழுதுகிறார்:- “இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.”

மார்க்சிய தத்துவம் நடைமுறையுடன் வினையாற்றி செழுமையடைந்து வருகின்றது. எங்கெல்சும் மாவோவும் மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையைப் பாதுகாத்துக் கொண்டே அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான உறவை இயங்கியல் ரீதியில் வளர்த்தெடுத்துள்ளனர். பொருளாதார அடித்தளம் மேல்கட்டுமானத்தை தீர்மானிக்கின்றது' என்று கூறும் அதே நேரத்தில் 'தன்னளவில் பொருளாதார அடிப்படை மீது எதிர்ச்செயல் புரிகிறது, சில வரையறைகளுக்குள் அதை மாற்றியமைக்கவும் கூடும் என்பது சொல்லாமலேயே அமையும்' என்றும் கூறுவது இயங்கியல் அடிப்படையிலான‌ விளக்கமாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக